| Penny Cuick |
ஜான் பென்னிகுவிக்
தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick).சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அணை கட்ட சொத்தை விற்றவர்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.பென்னி குக் நினைவு
- தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னி குக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுக் படம் வைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.
- தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது.